கோவை : ''வளமான மண் தான், நம் வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும், ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன,'' என, சுவிட்சர்லாந்து உலக பொருளாதார மாநாட்டில், 'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில், 'நகரங்களின் எதிர்காலம்' என்ற நிகழ்ச்சி நடந்தது. 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது:
உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றுக்கு, மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்.நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில், கட்டடங்கள் கட்டுவதை கட்டுமானத் துறையினர் பரிசீலிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, 50 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் மட்டும், 50 முதல் 100 மாடி கட்டடங்களை கட்டலாம். மீதமுள்ள, 49 ஏக்கரில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக காடு உருவாக்கலாம்.
உலகில், 72 சதவீத பொருளாதார முதலீடுகள், வெறும், 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம்பெயர செய்யும் காந்தமாக செயல்படுகின்றன.முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.