சிவகங்கை : சிவகங்கை மாவட்ட இ- சேவை மையங்களில் 'தமிழ் நிலம்' போர்ட் முடங்கியதால் பட்டா மாறுதல், பெண் குழந்தை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
கலெக்டர், தாலுகா, நகராட்சிகளில் 18 இடங்களிலும், தனியார் மூலமும் 35 இடங்களில் 'இ' - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் குறைந்த கட்டணத்தில் வருவாய், இருப்பிடம், பட்டா, சிட்டா அடங்கல் உட்பட 37 விதமான சான்றுகளை பெறலாம். இவற்றில் 'இ' டிஸ்ட்ரிக்' என்ற போர்ட்டில் சென்று தமிழ் நிலம் என்ற இணையத்திற்குள் சென்றால் தான் பட்டா மாறுதல், இரண்டு பெண் குழந்தை டெபாசிட் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக 'தமிழ் நிலம்' என்ற இணையம் ஓப்பன் ஆகவில்லை. இதனால் பட்டா மாறுதல், அடங்கல் பெறுதல், இரண்டு பெண் குழந்தை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் விவசாயிகள், குடும்ப தலைவர்கள் தவித்து வருகின்றனர்.எந்த 'இ' சேவை மையத்திற்கு சென்றாலும் 'தமிழ் நிலம்' ஓப்பன் ஆகவில்லை. இன்று போய் நாளை வா என்ற பதிலை தான் கூறி வருகின்றனர்.தமிழக விவசாயிகள் நிலங்களில் உழவு செய்து தானியங்களை உற்பத்தி செய்ய 'தமிழ் நிலம்' வெப்சைட் உதவாததால் விவசாயிகளின் நிலமை கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
பெண் கல்வி, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் அரசு இரண்டு பெண் குழந்தை திட்ட நிதி உதவி பெற முடியாமல் தவிக்க வைக்கிறது என 'இ' சேவை மையங்களுக்கு வரும் குடும்ப தலைவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.