அரசு ஊழியர்கள் தர்ணா
ஈரோடு, மே 27-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணா நடந்தது. மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கிடு, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்து பேசினார்.
கடந்த, ஜன., 1 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். ஈடு செய்யும் விடுப்பை ஒப்படைத்து பணப்பலனாக பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் உஷாராணி நன்றி கூறினார்.
காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பி
மரத்தை வெட்டிய தொழிலாளி பலி
கோபி, மே 27-
திங்களூர் அருகே, பலத்த காற்றால் அறுந்த மின்கம்பி, மரத்தின் மீது விழுந்தது. மரத்தை வெட்டிய தொழிலாளி பலியானார்.
திங்களூர் அருகே புளியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42, கூலி தொழிலாளி; இவரின் மனைவி பழனியம்மாள், 35; இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திங்களூர் பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டின் பின்னால் இருந்த வேப்ப மரத்தின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விட்டது. இதனால் மரத்தை அரிவாளால் வெட்டி அகற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கி சுப்பிரமணி இறந்தார். திங்களூர் போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியத்தின் சகோதரர் சரவணன், 47, புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காலை உணவை அரசு ஏற்று
நடத்த வலியுறுத்தி முறையீடு
ஈரோடு, மே 27-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு செய்தனர்.
மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா, மாவட்ட துணை தலைவர்கள் மஞ்சுளா, சுப்புலட்சுமி, செல்வி, மூர்த்தி, வெங்கிடு உட்பட பலர் பேசினர்.
முதல்வர் அறிவித்துள்ளபடி, சத்துணவில், காலை உணவு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
துய்யம்பூந்துறையில்
சிறப்பு மனுநீதி முகாம்
மொடக்குறிச்சி, மே 27-
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியை, ராஜ்யசபா எம்.பி.., அந்தியூர் செல்வராஜ் தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் துய்யம்பூந்துறை ஊராட்சியில், சான்சத் ஆதர்ஷ் கிராம் போஜனா திட்டத்தில், சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் பேபி, துணைத்தலைவர் தினகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், உமா முன்னிலை வகித்தனர். எம்பி., அந்தியூர் செல்வராஜ், கூடுதல் கலெக்டர் மதுபாலன் மனுக்களை பெற்றனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கழிவுநீர் வடிகால் அமைத்தல், தார் சாலை, குடிநீர் வசதி கேட்டு, 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
பாரதியார் சிலையை புனரமைத்த
அம்மாபேட்டை ரோட்டரி சங்கம்
ஈரோடு, மே ௨௭-
அம்மாபேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பாரதியார் சிலை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. அம்மாபேட்டை ரோட்டரி சங்கம் சார்பில், ௧.௫௦ லட்சம் ரூபாய் மதிப்பில், பாரதியார் சிலை புனரமைப்பு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சிலைக்கு, ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் காவேரி ரோட்டரி சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் சுப்ரமணி, பொருளாளர் கோபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கிலி கருப்பன் பண்டிகை;
பக்தர்கள் நுாதன வழிபாடு
தாராபுரம், மே 27-
சங்கிலி கருப்பன் பண்டிகையில், அரிவாளுடன் சென்று, பக்தர்கள் வழிபட்டனர்.
தாராபுரத்தை அடுத்த சீத்தக்காடு, அமராவதி ஆற்றங்கரையில், சங்கிலி கருப்பன் கோவில் உள்ளது. கடந்த, ௧1ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பண்டிகையின் முக்கிய நிகழ்வான அருள்வாக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் கழுத்தில் மாலை அணிந்து, அரிவாளை கையில் ஏந்தியபடி சென்றனர். அலங்கியம் ரோட்டில் நிறைவடைந்த ஊர்வலத்தில், சங்கிலி கருப்பன் அருள்வாக்கு பெறும் நிகழ்ச்சி நடந்தது.
வாழ்ந்து காட்டுவோம்
திட்டத்தில் கடனுதவி
சத்தியமங்கலம், மே 27-
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கடனுதவி பெற்று, சத்தியமங்கலம் யூனியன் இண்டியம்பாளையம் பஞ்.,ல், செயல்படும், பின்னலாடை நிறுவனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமான வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம் தாளவாடி யூனியனில், 77 பஞ்.,களில் செயல்படுகிறது. இதில், 6 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி, 16 ஆயிரத்து, 503 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். திட்டம் மூலம், 812 நபர்கள் பஞ்., அளவிலான கூட்டமைப்பில் தனி நபர் தொழில் கடன், 699 நலிவுற்றோருக்கு தொழில் கடன், 94 புலம் பெயர்ந்த இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் என, 5.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சத்தியமங்கலம் பி.டி.ஓ., பிரேம்குமார், மணிமாலா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெருந்துறை, மே 27-
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ், காங்., கட்சியை மோசமாக விமர்சனம் செய்தார். இதை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், வட்டார தலைவர் ராவுத்குமார் முன்னிலை வகித்தார். சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, போலீசார் பறிமுதல் செய்தனர்.