சென்னை: ''தமிழகத்தில், 1.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இதற்காக வரும் 12ம் தேதி, ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, சைதாப்பேட்டையில், மழைநீர் வடிகால் பணிகளை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில், தேசிய முதியோர் மருத்துவமனை கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர்கள் கொண்ட மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் அறிக்கை அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 70 லட்சம் பேர் பயனடைகின்றனர். அதேபோல இன்னுயிர் காப்போம் திட்டத்தில், சாலை விபத்தில் சிக்கிய, 66 ஆயிரத்து 946 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்காக, 60.26 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 93 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என, 1.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. பொதுமக்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள, ஒரு லட்சம் மெகா சூப்பர் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் வாயிலாக தமிழகம் வருபவர்களிடம், குரங்கு அம்மை நோய்க்கான கொப்பளங்கள் இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது. அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவரிடம் பரிசோதித்ததில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.