காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கடை மடை வரை தண்ணீர் செல்வதில்லை எனக்கூறி, வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.720 கோடி ரூபாய் மதிப்பீட்டில கடந்த ஆட்சியில் அ.தி.முக நடவடிக்கை எடுத்தது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தில் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் கசிவுநீர் திட்டங்கள் பாதிப்பு ஏற்படும். எனவே திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று காலை 10:00 மணிக்கு காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் கிராமத்தில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கீழ்பாவனி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக நத்தகடையூர், மருந்துகளை, முள்ளிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நத்தக்கடையூர் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பாஜக மாநில விவசாய அணி தரைலவர் நாகராஜ், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, இயற்கை வாழ்வுரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பொடாரன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, காங்கேயம் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ், கொ.ம.தே.க, மாவட்ட தலைவர் கங்காசக்திவேல், பல்வேறு அமைப்பினர் விவசாயிகள் பொதுமக்கள் பெண்கள் உள்பட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் செயல்படுத்தப்பட உள்ள கான்கிரீட் திட்டம் வேண்டாம் என முதல்வருக்கு கடிதம் அனுப்பி வத்தனர்.