காங்கேயம்:காங்கேயம் அருகே விவசாயி பட்டியில் புகுந்த மர்ம நபர்கள் மூன்று ஆடுகளை திருடிச் சென்றனர், இது அப்பகுதியில் ஆடு வளர்ப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை அருகே அரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆரிகிரி (54), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். காலையில் வழக்கம்போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. காரணம் பட்டியில் இருந்த ஆடுகளில் தரமான மூன்று ஆடுகள் மற்றும் 15 நாட்டுகோழிகள் காணவில்லை. அக்கம் பக்கத்தில் சென்று பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் பட்டியில் புகுந்து ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட ஆடு, கோழிகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதுபற்றிய புகாரின் போரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் அவ்வப்போது பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளில் ஒன்றிரண்டு திருடப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது ஒட்டு மொத்தமாக 15 நாட்டுகோழிகள் 3 ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் போலீசார் இரவு நேரத்தில் அடிக்கடி ரோந்து செல்லாததே ஆடுகள் திருட்டுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.