ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், அரசன் தாங்கலை சேர்ந்த நெசவு தொழிலாளர்களான மாணிக்கம், 51, அவர் மனைவி ராணி, 47, ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.அரக்கோணம் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், கந்து வட்டி கும்பலிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராததால், கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அரக்கோணம் டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை நடந்த பகுதியிலுள்ள மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்த போது மூன்று பேர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், மாணிக்கத்தின் மருமகன் தம்பி தரணி என்பவர் கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: மாணிக்கம், ராணி தம்பதியினர் கூலிக்கு பட்டு நெசவு செய்து வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது மகள் சசிகலாவின் கணவர் திருத்தணியை சேர்ந்த சாய்ராம் என்பவர் 2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
அசலையும், வட்டி பணத்தையும் மாணிக்கம் செலுத்தவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் சாய்ராமுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் மனைவியின் குடும்பத்தாரிடம் பிரச்சனை ஏற்பட்டது.சாய்ராம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். வேலுார் சத்துவாச்சாரியை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் மூலம் பில்லி சூனியத்தை மாணிக்கம் குடும்பத்தினர் வைத்ததால், சாய்ராம் மன நலம் பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஆத்திரமடைந்த சாய்ராமின் தம்பி திருத்தணியை சேர்ந்த தரணி என்பவர் கூலிப்படையை ஏவி மாணிக்கம், ராணியை கொலை செய்ய திட்டமிட்டார்.இதற்காக திருவள்ளூரை சேர்ந்த கூலிப்படை கும்பலிடம் 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முன்பணமாக 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். கூலிப்படையினர் மாணிக்கம், ராணியிடம் உங்களுக்கு கடன் பிரச்சனை உள்ளது, குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருகிறோம் என கூறி கடந்த 22 ம் தேதி சோளிங்கர் அழைத்து வந்துள்ளனர்.அங்கிருந்து 23 ம் தேதி இரவு அவர்களை கடத்திச் சென்ற கூலிப்படையினர் காருக்குள் வைத்து கட்டையால் அடித்து கொலை செய்து கைலாசபுரத்தில் உடல்களை வீசி விட்டு சென்றனர். ஏற்கனவே கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தாதததல் மாணிக்கம், ராணியை கொலை செய்ய கூலிப்படையினரை அனுப்பியிருந்ததும் தெரியவந்துள்ளது.இதையடுத்து திருத்தணியை சேர்ந்த தரணி, 25, கூலிப்படையை சேர்ந்த திருவள்ளூர் சுனில்குமார், 32, கூலிப்படை தலைவர் சந்திரன், 40, ஆகியோரை அரக்கோணம் தாலுகா போலீசார் இன்று கைது செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த கந்து வட்டி கும்பலை தேடி வருகின்றனர்.