ஊத்துக்கோட்டை, :பூண்டி ஒன்றியம், ஒதப்பை ஊராட்சியில் உள்ளது அய்யனேரி. இங்குள்ள ஏரியில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டால், அதில் உள்ள மீன்களை பிடிக்க, ஊராட்சி சார்பில் ஏலம் விடப்படும்.கடந்த 2020, டிசம்பரில் ஓராண்டுக்கு மீன் பிடிக்க நடந்த ஏலத்தில், 6,732 ரூபாய்க்கு ஒதப்பை காலனியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், மீன் பிடிக்கும் உரிமையை பெற்றார்.இந்த உரிமை முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இதனால், ஏரியில் மீன் பிடிக்க மீண்டும் ஏலம் விட, ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.ஆனால், ஏற்கனவே ஏலம் எடுத்தவர், 'இந்த முறையும் நானே மீன் பிடிப்பேன்' என, ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.இதற்கு, பொதுமக்களில் ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.இரு பிரிவினரும், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார், 'ஆர்.டி.ஓ., விசாரணைக்குப் பின் முடிவு எடுக்கப்படும். அதுவரை யாரும் ஏரியில் மீன் பிடிக்கக் கூடாது' என அறிவுறுத்தினர்.