சென்னை, :பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படிகளில் தொங்கியபடி பயணித்த 3,627 பேருக்கு, 13.67 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணியருக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, ஆர்.பி.எப்., ரயில்வே போலீஸ் இணைந்து, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவற்றின் வாயிலாக தினமும், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.பயணியர் சிலர், பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பது, மொபைல்போனில் பேசியபடி ரயில் பாதையை கடப்பதுடன், ரயில் இன்ஜின் முன்பு 'செல்பி' எடுக்கின்றனர்.இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது:மின்சார ரயில்களில் பயணத்தின் போது, பாதுகாப்பு விதியை மீறி, ரயில்களின் படிகளில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்தோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதன்படி, 2020ல் 1,650 பேருக்கு 6.25 லட்சமும், 2021ல் 1,294 பேருக்கு 5.04 லட்சமும், 2022 ஏப்ரல் வரையில் 683 பேருக்கு 2.37 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளோம்.கடந்த 2020 முதல் 2022 ஏப்ரல் வரையில் மொத்தம், 3,627 பேருக்கு, 13 லட்சத்து 67 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்.இதேபோல், மின்சார ரயில்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஆர்.பி.எப்., ரயில்வே போலீசார் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 10 குழுக்கள் வாயிலாக, தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.ஒவ்வொரு குழுவிலும் இரண்டு முதல் நான்கு பேர் வரை இருப்பர். பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவோர், விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.