சென்னை,-ராயப்பேட்டை புதிய மெட்ரோ நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டுமான பணி முடிந்து, நிலையம் மற்றும் சுரங்க பாதை அமைக்க பள்ளம் தோண்டும் பணி துவங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில், முதல்கட்டமாக, மாதவரம் - தரமணி இணைப்பு சாலை இடையே, மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை இடையே அனைத்து நிலையங்களும் சுரங்கத்தில் அமைகின்றன.கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம், தரை மட்டத்தில் இருந்து, 46 அடி ஆழத்தில் சுரங்க நிலையமாக அமைகிறது. இதற்காக, நான்கு புறமும், இரும்பு மற்றும் சிமென்ட் கம்பியால், நவீன பிரமாண்ட இயந்திரங்களால், 46 அடி ஆழம் வரை பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், மூன்று புறம் சுற்றுச்சவர் கட்டி முடிக்கப்பட்டு, நான்காவது புறம் சுவர் கட்டும் பணி நடக்கிறது. நான்கு புறமும் பாதுகாப்பு சுற்றுச்சுவரின் உட்புறம் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு, 46 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பள்ளத்தில் இறக்கி வைக்கப்பட்டு, சுரங்கம் அமைக்கும் பணி துவங்கப்படும்.
அதிகாரிகள் சீனா பயணம்
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஒப்பந்ததாரரால், கப்பலில் கொண்டு வரப்பட உள்ளன. ஒப்பந்த நிறுவனங்களின் ஆர்டர்களின் படி, இந்த இயந்திரங்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. இயந்திரங்கள் தயாரிப்பு பணியை சோதனை செய்ய சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவன உயர் அதிகாரிகள், சீனா சென்றுள்ளனர்.
காந்தி சிலை அகற்றம்?
பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில், பூந்தமல்லி பைபாஸ் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை, தரைக்கு மேல் பாலத்தில் மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. பவர்ஹசில் இருந்து கலங்கரைவிளக்கம் மெட்ரோ பாதை, சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், கலங்கரைவிளக்கம் மெட்ரோ சுரங்க நிலையம், கடற்கரை சாலையில் காந்தி சிலைக்கு பின்புறம் கட்டப்பட உள்ளது.கடற்கரையில், சுரங்கம் அமைக்க மண் ஆய்வு செய்யப்பட்டபோது, 11மீட்டர் ஆழத்துக் கீழ், மண்ணில் நெகிழ்வு தன்மை அதிகம் இருப்பதாகவும், இதனால், நிலையம் காந்திசாலை இருக்கும் இடத்தில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்காக, காந்திசலை அகற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், 'இத்திட்டத்திற்காக காந்திசிலையை அகற்ற ஆட்சேபனை இல்லை' என, சென்னை மாநகராட்சி, பொதுபணித்துறைக்கு என்.ஓ.சி., வழங்கியுள்ளது.காந்தி சிலையை அகற்றாமல், மெட்ரோ நிலையம் கட்டுவதற்கு திட்ட செயல்பாடு மாற்றப்பட்டுள்ளதா என, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே திட்டமிட்ட ஆழத்தை பாதியாக குறைத்து, அப்பகுதியில் கலங்கரைவிளக்கம் மெட்ரோ நிலையம் கட்டலாமா என ஆலோசிக்கிறோம். காந்தி சிலையை அகற்றாதபடி நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நிலையம் அமையும் இடம் குறித்து, இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இடையூறு இல்லாமல் ஆரம்பகட்ட பணி நடக்க வசதியாக, காந்திசிலையின் பின்பறம் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.