மறைமலை நகர், மறைமலை நகர் ராஜிவ் காந்தி நகரில் உள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் செய்தனர்.மறைமலை நகர் ராஜிவ் காந்தி நகர் பகுதியில், மேயக்கால் புறம்போக்கு நிலத்தில், 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், வருவாய்த் துறையினர் 'நோட்டீஸ்' வழங்கினர்.இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், வருவாய் மற்றும் மின் துறை அதிகாரிகள், அங்குள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு குறித்தும், மின்சார இணைப்பு குறித்தும் கணக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்டோர், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, நெடுஞ்சாலையின் இருபுறமும் 7 கி.மீ., வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த போக்குவரத்து நெரிசலில், திருச்சி நோக்கி சென்ற தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷின் கார் சிக்கியதுகாரிலேயே 20 நிமிடங்கள் அமர்ந்திருந்த அவர், பின் இறங்கி வந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார்.மக்கள், 'எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரிடம் முறையிட்டனர்.அமைச்சர் மகேஷ், ''இந்த பிரச்னை குறித்து, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.