செங்கல்பட்டு, :செங்கல்பட்டு புறவழிச் சாலையில், அரசு பேருந்துகள் நின்று செல்வதால், இரவு நேரத்தில், பாதுகாப்பிற்காக போலீசாரை நியமிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு புறவழிச் சாலையில், அரசு பேருந்து மற்றும் விரைவு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, புறவழிச் சாலையில் அரசு பேருந்து மற்றும் விரைவு பேருந்துகள் நின்று செல்ல, போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.இம்மாதம் 17ம் தேதியிலிருந்து, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், புறவழிச் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன.இதனால், வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசு, தனியார் வேலைக்கு செல்வோர் மிகவும் பயனடைந்து உள்ளனர். ஆனால், வெளியூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சென்று, இரவு நேரத்தில் திரும்பும் பொதுமக்கள், புறவழிச் சாலையில் இறங்கி செல்கின்றனர்.இரவு நேரம் என்பதால், வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால், பயணியர் மிகவும் அச்சப்படுகின்றனர். இரவில் அப்பகுதியில், பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடவில்லை.இதனால், அச்சம் அடையும் முதியவர்கள் மற்றும் பெண்கள், புறவழிச் சாலையில் இரவு நேரத்தில், பாதுகாப்பு பணியில் போலீார் ஈடுபட வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.