மாமல்லபுரம்,
சர்வதேச செஸ் போட்டிக்காக, மாமல்லபுரம் பேரூராட்சி பகுதி சார்ந்த மேம்பாட்டிற்காக, நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.மாமல்லபுரத்தில், சர்வதேச ஒலிம்பியாட் 44வது போட்டி, ஜூலை 28 முதல், ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. 186 நாடுகளிலிருந்து, வீரர்கள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இப்போட்டியை சிறப்பாக நடத்த, தமிழக அரசு 92 கோடி ரூபாய் வழங்கி, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வீரர்களை வரவேற்பது, விடுதிகளில் தங்க வைப்பது, பிற ஏற்பாடுகள் மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்காக, 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.குடிநீர், பொது சுகாதாரம், சாலை ஆகிய மேம்பாட்டு குழு பொறுப்பாளரான, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாமல்லபுரத்தில் போட்டி நடக்கும் 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், நேற்று ஆய்வு செய்தார்.செஸ் போட்டிக்கான சிறப்பு அலுவலர் தாரேஷ் அகமது, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோருடன் ஆலோசித்தார்.செஸ் வீரர்கள் தங்கும் விடுதிகள் பகுதியிலிருந்து போட்டி நடக்கும் இடம் வரை மற்றும் மாமல்லபுரத்தில், நெடுஞ்சாலை துறை, பேரூராட்சிக்குட்பட்ட சாலைகளை ஆய்வு செய்து, சர்வதேச தரத்துடன் மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.மாமல்லபுரம் நகர்ப்பகுதி தெருக்கள், கடற்கரை பகுதியை துாய்மையாக பராமரிப்பது; தடையற்ற குடிநீர், தற்காலிக கழிப்பறை ஏற்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, கடற்கரை கோவில் பகுதியில் பார்வையிட்டு, பேரூராட்சி இடத்தில், தொல்லியல் துறை அனுமதி பெற்று, பூங்கா ஏற்படுத்துவது குறித்தும், கூடுதல் தலைமை செயலர் ஆய்வு செய்தார்.
செஸ் போட்டி நடக்கும் பூஞ்சேரி 'போர் பாயின்ட்ஸ்' விடுதி வளாகம், போட்டி அரங்கம், மாமல்லபுரம் சிற்பங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. குழுவிற்கு, தலா ஒரு இன்ஸ்பெக்டர், சில சப் - இன்ஸ்பெக்டர்கள் என நியமிக்கப்படுகின்றனர்.வீரர்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பு குழுவிற்கான செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுடன், மாமல்லபுரம், சுற்றுப்புற விடுதி பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.விடுதிகளில் தங்கும் செஸ் வீரர்களை மட்டுமே அனுமதித்து, பிறர் தங்குவதை தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்குரிய வேறு ஆட்கள் நடமாட்டம் இருந்தால், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினார்.