செங்கல்பட்டு, :செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் வழித்தடத்தில், பயணியரை ஏற்றுவதற்காக வேகமாக செல்லும் தனியார் பேருந்துகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.வாகன போக்குவரத்துக்கு வசதியாக, இந்த நெடுஞ்சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.இச்சாலையில், தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், முன்னால் செல்லும் அரசு பேருந்துகளில் பயணியரை ஏறவிடாமல், தங்களுடைய பேருந்தில் ஏற்றுவதற்காக, அதிவேகமாக முந்தி செல்கின்றனர்.இதனால், மற்ற வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்படுத்துவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள், அசுரத்தனமான வேகத்தில் செல்வதால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.இருப்பினும், தனியார் பேருந்து ஓட்டுனர்கள், வேகத்தை குறைக்காமல் அப்படியே செல்கின்றனர்.மேலும், சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பதால், வேகமாக செல்லும் தனியார் பேருந்துகள், மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், அச்சத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.வேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை கண்காணித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.