காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், கட்டட வரைபட அனுமதி வழங்கும் பிரிவிலும், பட்டா மாற்றம் செய்யும் வருவாய் துறை பிரிவிலும் ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதேசமயம், ஒவ்வொரு கோப்புகளையும் பரிசீலனை செய்ய ஆயிரக்கணக்கான ரூபாய் 'கமிஷன்' பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 64 சதுர கி.மீ.,கொண்டதாகவும், 51 வார்டுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இந்த வார்டுகளில், 62,707 குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன.இத்தனை வீடுகளுக்கும் தேவையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, புதிய வரி விதிப்பு என அனைத்து வகையிலான சேவைகளும் மாநகராட்சி அலுவலகம் வாயிலாகவே நடைபெறுகிறது. ஆனால், இந்த சேவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில சேவைகள், பொதுமக்களை இழுத்தடித்து, அலையவிடுவது பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
பயனாளிகள் கவலைகுறிப்பாக, புதிய கட்டடங்களுக்கான கட்டட அனுமதி வேண்டி பலர் விண்ணப்பிக்கின்றனர். வீடு கட்ட உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்பதால், 'பில்டர்ஸ்' மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கும் பலருக்கு, குறித்த நேரத்தில் கட்டட அனுமதி கிடைக்கவில்லை என நீண்ட நாட்களாக புகார் உள்ளது.
நகராட்சியாக இருக்கும்போது இருந்த அதே பிரச்னை, மாநகராட்சியாக மாறிய பிறகும் அதே காலதாமதம் ஆவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். கட்டட அனுமதி பெற்றால்தான் வங்கியில் லோன் பெற முடியும் என்பதால், பலர் அமைதியாக காத்திருக்கின்றனர்.
கட்டட அனுமதியில், ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்றவாறு, கட்டட வரைபட அனுமதி வழங்கும் பிரிவில், ஆயிரக்கணக்கான ரூபாய் கமிஷன் கேட்பதாக பில்டர்ஸ் தெரிவிக்கின்றனர்.குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக தொகை கமிஷன் பெறப்படுவதாக பில்டர்ஸ் பலர் தெரிவிக்கின்றனர்.
இந்த கமிஷன் பணத்தை பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் தரப்படுவதில்லை. பில்டர்ஸ் மூலமாக அதிகாரிகளுக்கு தருவதால், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் அதிகாரிகள் சிக்குவதில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை திறக்காமலேயே பல நாட்கள் வைத்திருந்து, கமிஷன் பெற்ற பிறகு அவற்றை பரிசீலனை செய்வதாகவும் பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுபோன்ற மோசமான நடைமுறைகளை களைய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நாராயணன் கூறியதாவது:கட்டட அனுமதிக்கான கோப்புகள் எதுவும் எங்களிடம் இல்லை. உடனுக்குடன் அனைத்து 'பைல்'களையும் வழங்கிவிடுகிறோம்.
என்னிடம் நான்கு பைல்கள் மட்டுமே இருக்கும். நேரம் கிடைக்கும்போது அவற்றை வழங்கி விடுவோம். காலதாமதம் ஆவதாக புகார் தெரிவிக்கும் நபர்கள் என்னிடம் தெரிவிக்கட்டும்; உடனடியாக கட்டட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே மாநகராட்சியில், 'செட்டில்மென்ட்' நகர நிலவரி திட்ட தாசில்தார் கீழ் பணியாற்றும் வருவாய் துறை யூனிட்டில், ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்துள்ளது. குறிப்பாக பட்டா மாற்றம், சப் - -டிவிஷன் செய்வது போன்ற வழக்கமான பணிகள் கூட பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக, விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அலுவலகத்திலும், சப் - -டிவிஷன் செய்ய ஆயிரக்கணக்கான ரூபாய் கமிஷன் கேட்பதாக புகார் உள்ளது. வழக்கமான பணிகளான பட்டா பெயர் மாற்றம் கூட மிகுந்த தாமதம் செய்யப்படுகிறது.
அதிகாரிகள் முறையான பதிலும் வழங்குவதில்லை என விண்ணப்பதாரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பட்டா பெயர் மாற்றம் மற்றும் சப் - -டிவிஷன் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.