காரைக்கால்: காரைக்கால் மீனவ கிராமத்தில் நள்ளிரவில், 14 பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மாணிக்கவேல், திருமுருகன், விஜயன் உள்ளிட்ட 14 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதில், மூன்று குழந்தைகளும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. மயங்கி விழுந்தவர்களை, அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், அதை குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.