சென்னை: அதிநவீன 'ரேடார்' தயாரிப்பு பணியில், ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ரேடார் 1,500 கி.மீ., சுற்றளவில் இருந்து வரும் தாக்குதல்களையும் கண்டறியும் என, டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, வர்த்தக மையத்தில், ராணுவ கண்காட்சியில், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை, இந்திய கடற்படை கொள்முதல் பிரிவு, இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., உட்பட, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
டி.ஆர்.டி.ஓ., அமைப்பு கண்காட்சி நுழைவு வாயில் அருகே அரங்கு அமைத்துள்ளது. அதில், 'ஆருத்ரா' என்ற 'மீடியம் பவர் ரேடார்' மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 300 கி.மீ., சுற்றளவில், பல்வகை தாக்குதலையும் கண்காணிக்கும் வகையில் இந்த ரேடார் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானப்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 'ஏசர்' எனும் எலக்ட்ரானிக் வடிவிலான, விமானப் படையின் அனைத்து வகை விமானத்திலும் பொருந்தக் கூடிய ரேடார் தயாரிக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ., சுற்றளவிலான தாக்குதல்களை கண்காணிக்க முடியும். இதற்கு முன், 80 கி.மீ., சுற்றளவு ரேடார் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரே முறையில் தகர்க்கும்
அடுத்த ஆண்டுக்குள் தயாரிப்பு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடைபெறும். அரங்கில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகை தளவாட மாதிரிகளும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
மேலும், நிலத்தில் பயன்படுத்தக் கூடிய, 'அதுல்யா' எனும் 'ஏர் டிபன்ஸ் பையர் கன்ட்ரோல் ரேடார்' புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடாரின் சிறப்பு, 20 கி.மீ., சுற்றளவில், எந்த முனையிலிருந்து வரும் தாக்குதல்களையும், துப்பாக்கியால் ஒரே முறையில் தகர்க்கும் திறன் உடையது.
இதே போல, ஏர்போர்ன் சர்வைலன்ஸ் சிஸ்டம், அர்ஜூன் எம்.பி.டி., பீரங்கி உட்பட, பல்வேறு புதிய தயாரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:
'ஆருத்ரா' என்ற 'மீடியம் பவர் ரேடார்' மாதிரி, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 300 கி.மீ., சுற்றளவில், பல்வகை தாக்குதலையும் கண்காணிக்கும் வகையில், இந்த ரேடார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனைகள்முடிந்து, தயாரிப்பு ஆணைகள் பெற உள்ளோம்.இதே போல, 1,500 கி.மீ., சுற்றளவில் இருந்து வரும் தாக்குதல்களையும் கண்டறியும், அதி நவீன ரேடார் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.