சென்னை: ''திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைப்போரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ஒவ்வொரு போலீசாரும் காவல் துறையை தலைநிமிர வைக்கும் நபராக சிறப்புடன் பணியாற்ற வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினர். காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில் பணிபுரியும், 319 பேருக்கு, மெச்சத்தகுந்த, தகைசால் மற்றும் வீர தீரச்செயல் உள்ளிட்ட பணிகளுக்கு, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், நேற்று மாலை நடந்தது.
பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமலும், அரசியல், மதம், ஜாதி ரீதியாக வன்முறை உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைப்போரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதை பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கூலிப்படையினர் முழுதும் துடைத்தெறிய வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும்.
வீர தீர செயல்புரிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும், வீர மரணம் அடைவோரின் குடும்பத்தினருக்கும், அரசின் சார்பில் முதல்வரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைள் வழங்கப்படுகிறது. இனி, மத்திய அரசு, வழங்கும் ஜனாதிபதி வீரப் பதக்கத்திற்கு இணையாக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினுக்கு, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.