கள்ளக்குறிச்சி: ''எழுதுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, சென்னை, மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணன் பேசினார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம், நுால் வெளியீடு மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை வகித்தார். தாளாளர் குமார், செயலர் கோவிந்தராஜி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.
அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் தமிழ் பேராசிரியர் சிவபெருமான், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா பேசினர்.தொடர்ந்து முனைவர் சிவபெருமான் எழுதிய 'உணவு பற்றிய திருமூலர், திருவள்ளுவரின் உன்னத கருத்துகள்' என்ற நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி முன்னாள் கல்வி இயக்குனர் மதிவாணன் வெளியிட, மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணன் பெற்றுக் கொண்டு நுாலின் சிறப்புகள் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது: எங்களது மணிமேகலை பிரசுரத்தில், இதுவரை, 11 ஆயிரம் நுால்களை வெளியிட்டு இருக்கிறோம். 4,400 நுால்கள் விற்பனையில் இருக்கின்றன. 3,500 எழுத்தாளர்கள் நுால்கள் எழுதி இருக்கின்றனர். அதில், நெருக்கமாக இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் தான் சிவபெருமான். இவர் ஜோதிடம், ஆன்மிகம், உணவு பழக்க வழக்கம் போன்ற பல்வேறு வகையான நுால்களை எழுதி, பல்துறை எழுத்தாளராக சிறந்து விளங்குகிறார்.
எழுத்து என்பது ஒரு தவம், எல்லாராலும் எழுதி விட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன் கடிதம் எழுதும் பழக்கம் அதிகளவில் இருந்தது. தற்போது பெரும்பாலும் யாரும் எழுதுவது கிடையாது. வாட்ஸ் ஆப் மெசேஜ் தான் அதிகமாக உள்ளது. எழுதுவது என்பது கடினமான பணியாக உள்ளது. என்னதான் நவீனமயமானாலும் எழுதுவது என்பது மிகவும் அவசியமானதாகும்.
மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், படியுங்கள். நுாலகத்தின் பயன்பாடுகள் அதிகரிக்க வேண்டும். என்ன தான் லேப் டாப், மொபைல் போன்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், புத்தகங்கள் வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் 10 பக்கங்களாவது படிக்க வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார். உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.