கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திரக்கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக, பெண் உட்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 48; கொங்கராயபாளையத்தில் வாடகை பாத்திரக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு முன் தனது மினி சரக்கு வேனை நாராயணசாமி நிறுத்தியிருந்தார். இரவு 7:30 மணியளவில், பைக்கில் வந்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு என்பவர் வேன் மீது மோதியுள்ளார். இது குறித்து கேட்டபோது நாராயணசாமிக்கும், ராமுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராமு மற்றும் அவரது தரப்பினர், இரவு 8:30 மணியளவில் நாராயணசாமியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு, வீட்டிற்கு முன் நின்றிருந்த மினி வேன் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, வீட்டிற்குள் இருந்த நாராயணசாமியை வெளியே இழுத்து வந்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நாராயணசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நாராயணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
நாராயணசாமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி புதுஉச்சிமேடு பஸ் நிறுத்தம் அருகே இரவு 9:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., ராஜலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போகச் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதுஉச்சிமேட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு, மாயவன் மகன் ராஜேந்திரன், ஜெயசங்கர் மகன்கள் அஜித்குமார், அலெக்ஸ் பாண்டியன், ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வரஞ்சம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில் ராமு, 26; அஜித்குமார், 22; அலெக்ஸ் பாண்டியன், 30; பரமேஸ்வரி, 48; ஆகிய 4 பேரை நேற்று காலை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடிவந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நாராயணசாமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்தும், எஞ்சிய குற்றவாளி ராஜேந்திரனை கைது செய்யக்கோரியும் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை எதிரே, நேற்று மதியம் 12:30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 12:50 மணியளவில் பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை, 50; கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும், உளுந்துார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.