ஈரோட்டில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா முன்னிலையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் நல்லசாமி: கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் குப்பை கொட்டுவதாலும், கரைகளை சேதப்படுத்துவதாலும், பாசன நீர் வீணாகி, கடைமடை செல்வதில்லை. கீழ்பவானியில் துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். கான்கிரீட் தளம், கான்கிரீட் கரை அமைத்தால், நிலத்தடி நீராதாரம் வீணாகும். கான்கிரீட் தள பிரச்னைக்கு பிற சங்க நிர்வாகிகள் ராமசாமி, பெரியசாமி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி: கீழ்பவானியில் பணி செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுபற்றி பலருக்கும் பல கருத்து உள்ளதால், இங்கு பேசுவதை தவிர்த்து, மனுவாக வழங்குங்கள்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி: தொடர் மழை, காற்றால், மஞ்சள், வாழை சேத
மடைந்துள்ளது. மழை பாதிப்பிலும், மஞ்சளை அறுவடை செய்து, வேகவைத்து பதமாக்கும் கருவி கண்டறிய வேண்டும். அரசு நிலங்களில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், தற்போதே இடத்தை தேர்வு செய்து ஏற்பாடு செய்ய வேண்டும். தேங்காய் பருப்பு அதிகமாக வரத்தாகிறது. ஆனால், அரசின் விதிமுறைகளால் அரசு அறிவித்த விலைக்கு கொள்முதல் ஆகாமல், மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விதிகளை அரசு தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
காளிங்கராயன் பாசன சபை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி: கடந்தாண்டு காளிங்கராயன் வாய்க்காலில், 86 கோடி ரூபாயில் பாலம், மதகுகள் சீரமைப்பு பணி நடந்ததால், தாமதமாக தண்ணீர் திறந்து, தற்போது மஞ்சள் பயிர் அறுவடை நிலையில் மழையால் பாதித்துள்ளது.
நடப்பாண்டு ஜூன், 16ல் தண்ணீர் திறக்க வேண்டி உள்ளதால், முன்னதாக மராமத்து பணி செய்ய வேண்டும். சாய, சலவை, தோல் ஆலை கழிவால் காளிங்கராயன் வாய்க்காலை ஒட்டிய பேபி வாய்க்கால் மாசடைந்துள்ளது. கரும்பு வெட்டுக்கூலி உயர்ந்துள்ள தால், விவசாயிகள் - அதிகாரிகள் - சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்: காளிங்கராயன் வாய்க்காலில் பராமரிப்பு பணி நேற்று முதல் நடந்து வருகிறது. பேபி வாய்க்காலும் சுத்தம் செய்யப்படும். அணையில் நீர் இருப்பு, வரத்தை கவனித்து, கலெக்டர் மூலம் ஜூன், 16ல் தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.