மது அருந்தி ஜாலியாக இருக்க வழிப்பறியில் ஈடுபட்ட, கரூர் கும்பலை, சேலம் போலீசார், காருடன் சுற்றிவளைத்து பிடித்து, புதுச்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 21. மினி லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம், மாங்காய் 'லோடு' ஏற்றி, பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தார். இரவு, 9:45 மணிக்கு, புதுச்சத்திரம், பெருமாள் கோவில் மேடு அருகே வந்தபோது, வேகமாக வந்த, 'ஸ்கார்பியோ' கார், லாரியை மறித்து நின்றது.
அதில் இருந்து இறங்கிய, 5 பேர், 'காரை மோதுவது போல் ஏன் வந்தாய்' எனக்கூறி மிரட்டி, 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து, சதீஷ்குமார், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, சேலம் மாநகர், மாவட்ட போலீசார், தர்மபுரி, கிருஷ்ணகிரி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
சதீஷ்குமாரும், காரை பின்தொடர்ந்தார். சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸில், இரவு ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., அன்பழகன், லாரியில் ஏறி காரை துரத்தினார். இதையறிந்த கும்பல், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 'பர்ன் அன் கோ' அருகே, இருளான பகுதியில் காரை நிறுத்தினர். அங்கு வந்த சூரமங்கலம் போலீசார், காருடன் ஐந்து பேரையும் பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அதில் இருந்தவர்ள், கரூரை சேர்ந்த மணிகண்டன், 25, பிரபு, 26, அரவிந்தன், 23, முகமது யூசுப், 25, அஜித், 27, என்பதும், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற நிலையில், மது அருந்தி ஜாலியாக இருக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதையடுத்து, காருடன் ஐந்து பேரையும், புதுச்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், 5 பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.