சேலம், உடையாப்பட்டியில் உள்ள மசாலா தயாரிப்பு நிறுவனத்தில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று சோதனை நடத்தினர். அப்போது,
'ஜானிஸ் ஏற்காடு' பெயரில், மிளகு தோல் கொண்டு மிளகு பொடி தயாரிப்பது, சிக்கன், 65 மசாலாவில், செயற்கை நிறமி அதிகம் கலந்து தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டன. விற்பனைக்கு தயாராக வைத்திருந்த, கலப்பட மிளகு பொடி, 320 கிலோ, கலப்பட மசாலா பொருட்கள், 317.5 கிலோ, அதில் கலப்பட தேவைக்கு வைத்திருந்த, 80 கிலோ ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 3,690 ரூபாய்.
இதுகுறித்து, கதிரவன் கூறுகையில், ''பறிமுதல் செய்த மசாலா பொருட்கள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மசாலா நிறுவன உரிமையாளர் பழனியப்பனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். ஆய்வு கூட முடிவு வந்ததும், சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை தொடரும். அத்துடன் மசாலா நிறுவன பொருட்களை பயன்படுத்தும் ஓட்டல் குறித்தும் விசாரணை நடக்கிறது,'' என்றார்.