கோபி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொன்று நாடகமாடிய, மனைவி உள்பட நான்கு பேரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி, அரசூர் அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; பூட்டு, சாவி வியாபாரி; இவரின் மனைவி மகேஸ்வரி, 26; சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவன கணக்காளர்.
சத்தியமங்கலம் அருகே சின்னட்டிபாளையத்தில், யமாஹா பைக்கில், கடந்த, 23ம் தேதி லோகநாதன் சென்றார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் சாலையோர மைல் கல்லில் மோதி இறந்ததாக, அவரின் மனைவி பங்களாப்புதுார் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின், உடலை ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, லோகநாதனின் தாய் சாந்தி, 50, பங்களாப்புதுார் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். இதனால் மகேஸ்வரியிடம் போலீசார் விசாரித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில், கள்ளக்
காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மகேஸ்வரிக்கு அவருடன் நிறுவனத்தில் பணிபுரிந்த கவுரிசங்கர், 26, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த லோகநாதன் கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட, மகேஸ்வரி, கவுரிசங்கர் திட்டம் தீட்டினர்.
திட்டப்படி கடந்த, 23ல் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு, லோகநாதனை மகேஸ்வரி அழைத்து சென்றார். அப்போது கவுரிசங்கர், அவரது நண்பர்கள் விஜய், 23, விக்னேஷ்வரன், 24, ஆகியோருடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொன்றார். லோகநாதன் உடலை வேனில் எடுத்து சென்று, சின்னட்டி
பாளையம் என்ற இடத்தில் வீசினர். பைக்கில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி மைல் கல்லில் மோதி இறந்ததாக நாடகமாடியுள்ளனர். லோகநாதனின் தாய் புகார் தந்ததால், மகேஸ்வரியின் கொடூர செயல் தெரிந்து விட்டது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், மகேஸ்வரி உட்பட நால்வரையும், நேற்று கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர்
படுத்தினர். மகேஸ்வரியை கோவை பெண்கள் மத்திய சிறையிலும், மற்ற மூவரையும் கோபியில் உள்ள ஈரோடு மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.