குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி இன்று துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடை சீசன் இந்த ஆண்டு களைகட்டியுது. இந்த ஆண்டு ஊட்டியில், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாவின் நிறைவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி இன்று நடந்தது.
பழக்கண்காட்சிக்காக நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 25 வகையில், 3 டன் பழங்களால் மலை தேனீ, கழுகு, டெடிபியர், ஊட்டி 200, மஞ்சப்பை உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில் அமைத்த அரங்குகளில், கோவில் தேர், தாஜ்மகால், டிராகன், மீன், மயில், வாத்து உட்பட பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவிற்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியது. கண்காட்சியை நகராட்சி தலைவி ஷீலா கேத்ரின் துவக்கி வைத்தார். ஊட்டி ஆர்டிஓ., துரைசாமி (குன்னூர் பொறுப்பு) உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.