ஈரோட்டில், டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து, 45 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாயை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
ஈரோடு, பெருந்துறை சாலையில், தங்கவேல் டாக்டர் வீதியில் வசிப்பவர் விஷ்ணு தீபக், 44; பிரபல தோல் டாக்டர். இவரின் மனைவி சத்யா. இவர்களின் மகன் யோகசந்திரன். மகனுக்கு மொட்டை போட, விருத்தாசலத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு, மனைவியுடன், 22ம் தேதி சென்றார். நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 45 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி, மூன்று லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.
புகாரின்படி ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள், வீட்டின் பல பகுதிகளில் மிளகாய் பொடி துாவி சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஈரோட்டில் கடந்த சில நாட்களாக, ஆளில்லாத வீடுகளை குறி வைத்து, திருட்டு சம்பவம் நடப்பதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.