திருச்சி:லால்குடி அருகே, கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த பண்ணை உரிமையாளரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், லால்குடி அருகே விடுதலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 60, சணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன், 38, பண்ணையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 22ம் தேதி, பண்ணைக்கு சென்ற அவரை, செந்தில்முருகன் உட்பட சிலர், ரத்தக்காயங்களுடன், வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.
உடலில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த முருகேசன், சில மணி நேரத்தில் இறந்து விட்டார். அவரது மனைவி சகுந்தலா, கல்லக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.பண்ணை உரிமையாளர் செந்தில்முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், மூன்று மாதங்களுக்கு முன், பண்ணையில் கூலி வேலைக்கு சேர்ந்த முருகேசன், சொன்ன வேலையை சரியாக செய்யாததால், கட்டை, அரிவாள் மற்றும் கையால் அடித்துள்ளார். காயமடைந்த முருகேசனை பண்ணையில் வேலை செய்பவர்கள் உதவியுடன், அவரது வீட்டுக்கு கொண்டு போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, செந்தில்முருகனை கைது செய்த போலீசார், நேற்று லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.