ஊட்டி:நீலகிரி மாவட்டம், குன்னுார் ஜெகதளாவில், 24ல் நடந்த அரசு பள்ளி விழாவில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், 'படுக சமுதாய மக்களை, பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை,' என பேசினார்.இதை தொடர்ந்து, ஊட்டியில், பல்வேறு அரசியல் கட்சியினர், சில படுகர் சமுதாய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கூட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி (காங்.,) அளித்த பேட்டியில், ''படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில், வனத்துறை அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. முதல்வரை சந்திக்க உள்ளோம்,'' என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், பா.ஜ., மாவட்ட முன்னாள் தலைவர் குமரன், படுகதேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.