கோவை:கோவையில், குழந்தையை கடத்த முயற்சித்த உ.பி., வாலிபரை பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோவை சிங்காநல்லுார் எம்.ஜி.ஆர்., காலனியில் 2 நாட்களுக்கு முன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பஞ்சு மிட்டாய் விற்றுச் சென்றுள்ளார். அவரை அருகில் நின்று வேடிக்கை பார்த்த 6 வயது சிறுமியை, பஞ்சு மிட்டாய் தருவதாக கூறி, அந்த வாலிபர் அழைத்துள்ளார்.
பின், வர மறுத்த சிறுமியை இழுத்து சென்றுள்ளார். இதைக்கண்டு, அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரித்தபோது, சிறுமியை அவர் கடத்திச்செல்ல முயற்சித்தது உறுதி செய்யப்பட்டது.அந்த வாலிபர், உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பெயர் யோகேஷ் என்றும் தெரிவித்தார். வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அதே வாலிபர் நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். முதல் நாள் அவரை சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்த இருவர், அந்த வாலிபரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர்.'குழந்தை கடத்தல் ஆசாமி' என்று கூறியதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், தர்ம அடி கொடுத்தனர். பிடிபட்ட வாலிபர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த நபரை, சிங்காநல்லுார் போலீசார் முதல் நாள் விடுவித்தது எப்படி என்றும் விசாரணை நடக்கிறது.