கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டதால், மூன்று மாநிலம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ், 38. இவர், நேற்று முன்தினம் இரவு கணவருடன் வீட்டுக்கு திரும்பும் வழியில் காட்டு யானை தாக்கி மும்தாஜ் பலியானார்.
அப்பகுதியினர் இரவில், உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'இறந்தவரின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; காட்டு யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தினர்.அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நள்ளிரவு 2:00 மணிக்கு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் கூடலுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில், அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால், உடலை பிரேதப் பரிசோதனை செய்ய நேற்று தாமதம் ஏற்பட்டது. அதை கண்டித்து, அரசு மருத்துவமனை அருகே, கூடலுார் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன்.ஜெயசீலன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம்- கர்நாடகா - கேரளா இடையே, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன், டி.எஸ்.பி., குமார், தாசில்தார் சித்தராஜ் ஆகியோர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், 2 மணி நேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.
கடந்த 26ல் கூடலுார் ஓவேலி ஆரூட்டுபாறையில், யானை தாக்கியதில் ஆனந்தராஜ் பலியானார். இந்த யானையை பிடிப்பதற்காக, முதுமலை கும்கி யானைகள் உதவியுடன், வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு யானை நேற்று முன்தினம் இரவு, மும்தாஜை தாக்கி கொன்ற சம்பவம், மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.