திருப்பூர்,:திருப்பூரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை நண்பர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் தொடர்புடைய ஒருவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து, இரண்டு மோதிரங்களை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன், 29; இவரது நண்பர், மங்கலத்தை சேர்ந்த அஜ்மீர் காஜா, 36. இவரும், அருகருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
சில மாதங்கள் முன், சதாம் உசேன், நண்பர்களான அஜ்மீர் காஜா, முகமது ஹக்கீம் ஆகியோரிடம் தலா, 5,000ம் ரூபாய் வாங்கி இருந்தார். இப்பணத்தை பலமுறை கேட்டும், சதாம் உசேன் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.நேற்று முன்தினம் மாலை, அஜ்மீர் காஜா, சதாம் உசேன் உட்பட ஆறு பேர், வஞ்சிபாளையம் அருகே மது அருந்தினர். பணம் தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அஜ்மீர் காஜா உட்பட ஐந்து பேரும், சதாம் உசேனை அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையால் தாக்கி பைக்கில் தப்பினர். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின், பைக்கில் தப்பியவர்களை விரட்டி சென்று, ஐந்து பேரையும் பிடித்து திருமுருகன்பூண்டி போலீசிடம் ஒப்படைத்தனர்.
மூச்சு திணறல்
அப்போது, அஜ்மீர் காஜாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. குடும்பத்தினருக்கு தகவல் அளித்த போலீசார், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அஜ்மீர் காஜாவிடம் டாக்டர்கள் விசாரித்தில், 'பொதுமக்களிடம் சிக்கிய போது, போலீசார் விசாரணைக்கு பயந்து, விரலில் அணிந்திருந்த இரண்டு வெள்ளி மோதிரத்தை கழற்றி விழுங்கியதாக,' தெரிவித்தார். 'ஸ்கேன்' செய்து பார்த்த போது, இரு மோதிரங்கள் மூச்சுக்குழாயில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.படுகாயமடைந்த சதாம் உசேன் மேல் சிகிச்சைக்காக, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கில், உதயகுமார், 21, முகமது ஹக்கீம், 39, ரியாஷ், 20 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2015ல் வேலம்பாளையத்தில் தி.மு.க., பிரமுகர் சுப்ரமணியம் கொலை வழக்கில் அஜ்மீர் காஜா, முகமது ஹக்கீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.