நாமக்கல்'கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின், 25 சதவீத இடஒதுக்கீட்டில், அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட
பள்ளிகளில், நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கைக்கு, இணையம் வழியாக, கடந்த, ஏப்., 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இணைய வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களில், தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் விபரங்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. இப்பள்ளிகளில், நுழைவுநிலை வகுப்பில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும்.நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான விண்ணப்பங்களுக்கு, நாளை (மே 30), குலுக்கல் முறையில், துறை அலுவலர்கள் முன்னிலையில், சேர்க்கைக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், சிறப்பு பிரிவின் கீழ், வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர், ெஹச்.ஐ.வி., நோய் பாதிக்கப்பட்டோர், மூன்றாம்
பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை மற்றும் மாற்றுதிறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்கு, குலுக்கல் நடத்துவதற்கு முன் சேர்க்கை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம், நேற்று டி.இ.ஓ., ராமன் தலைமையில் நடந்தது.