திருப்பூர்,விவசாயிகள் தரையில் அமர்ந்து வாக்குவாதம் செய்ததால், கூட்டரங்கில் இருந்து வெளியேறிய கலெக்டர், வராண்டாவில் அமர்ந்து, மனுக்களை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில், விவசாயிகள் 300க்கும் அதிகமானவர்கள் திரண்டிருந்தனர். இருக்கை வசதியில்லாததால், கலெக்டர் மேஜை முன்பாக, விவசாயிகள் தரையில் அமர்ந்திருந்தனர்.
கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்ததும், இந்த கூட்டரங்கில் இடப்பற்றாக்குறையாக இருக்கிறது; 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடத்த வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தினர்.
கலெக்டர் பேசுகையில், ''பவர்பாயின்ட்' ஸ்கிரீன் வசதியுடன், போதிய இருக்கை வசதியுடன், கூட்டரங்கு தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு விழா, அனைத்து வகையான குறைகேட்பு கூட்டமும் இங்குதான் நடக்கிறது. தேவையான கூடுதல் இருக்கை வசதி செய்து கொடுக்கப்படும்; இங்குதான் கூட்டம் நடக்கும்,'' என்றார்.
விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சிவக்குமார், ''இருக்கை வசதியின்றி நடந்தாலும், அளிக்கப்படும் மனுக்களுக்கு பதில் இல்லை. கூட்டத்தில் பேச, அனைவருக்கும் முறைப்படி அனுமதிக்க வேண்டும்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்,'' என்று குற்றம்சாட்டினார்.
அதன்பின், சில விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரி இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த கலெக்டர் வினீத், கூட்டரங்கில் இருந்து வெளியேறினார். காலை, 11:20 மணி முதல், கலெக்டர் அலுவலக வரவேற்பு வராண்டா பகுதியில் டேபிள், சேர் அமைத்து, விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார்.
விவசாயிகள், சொந்த கோரிக்கைக்கான மனுக்களை, கலெக்டரிடம் அளித்து சென்றனர். இந்த இடைவெளியில், பல்வேறு பகுதியில் இருந்து, கூட்டரங்கிற்கு இருக்கைகள் எடுத்து வரப்பட்டன. விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்ததால் 12:14 மணிக்கு, மீண்டும் கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் துவங்கியது.