புன்செய்புளியம்பட்டி,பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலை மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள, அப்பர் பவானி அணையில் மதகு பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அங்கிந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பில்லுார் அணையை அடைந்து, அங்கிருந்து பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 663 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5,513 கனஅடியாக நேற்று அதிகரித்தது.
அதேசமயம் அணை நீர்மட்டம், 82.36 அடி, நீர் இருப்பு, 16.9 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து அரக்கன்கோட்ட-தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு, 750 கனஅடி தண்ணீர், குடிநீருக்காக, 150 கன அடி என, 900 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.