சேலம்,தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதுகுறித்து, அச்சங்க மாநில பொதுச்செயலர் வேணுகோபால் கூறியதாவது: கோவையில் ஜூலை, 5ல், உழவர் தின பேரணி நடக்க உள்ளது. இலவச மின்சாரம் கேட்டு, உயிர் தியாகம் செய்த, 43 விவசாயிகள் நினைவாக, பேரணி நடத்தப்படும். யானை, காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம், கோவை, ஈரோடு, சேலம் உள்பட, 13 மாவட்டங்களில் அதிகரித்து, 20 ஆண்டாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம்.
துாக்கத்தை தொலைத்து, விளை நிலங்களையும் பயிர்களையும் காக்க வேண்டியுள்ளது. அதனால் விலங்குகளை கட்டுப்படுத்த பலமுறை வலியுறுத்தியும், போராடியும் பிரச்னைக்கு தீர்வு இல்லை. அதனால், கலெக்டரை சந்தித்து, கருணை கொலைக்கு அனுமதி கேட்டு மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.