திருத்தணி-கல் குவாரியில் அனுமதிக்காத இடத்தில் பாறைகள் வெட்டி எடுத்ததை தொடர்ந்து அக்குவாரிக்கு நேற்று புதிய தாசில்தார் 'சீல்' வைத்து பூட்டினார்.திருத்தணி தாலுகா, டி.சி.கண்டிகை கிராமம், கிழக்குப் பகுதியில், 4.94 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் சாதாரண கல் குவாரி நடத்த, சென்னை, மேற்கு தாம்பரம் ஸ்ரீராம் என்பவர், கலெக்டரிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார்.ஆனால் கல் குவாரி ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், தனக்கு அனுமதி அளிக்காத இடத்திலும் பாறைகளை உடைத்தார். மேலும், அரசு அனுமதித்த ஆழத்தை விட, அதிகமான ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது.இதுதவிர, 3,675 கன மீட்டர் அளவிற்கு கற்கள் வெட்டி எடுத்தும், விதிமுறைக்கு புறம்பாக மண் எடுத்துள்ளார்.இது குறித்து, கடந்த 24ம் தேதி அப்போதைய தாசில்தார் மணிவாசகம், ஸ்ரீராம் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று, புதிதாக பொறுப்பேற்ற, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, போலீசாருடன் சென்று, கல்குவாரிக்கு 'சீல்' வைத்து பூட்டினார்.