சேலம் ;சேலத்தில் நேற்று தொடங்கிய காலைக்கதிர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோருடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் நிபுணர்களின் ஆலோசனையை கேட்க, குவிந்த மாணவர் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
பள்ளிப்படிப்பை விடவும், கல்லுாரி கல்வி வித்தியாசமானது. அவரவர் திறன்களுக்கும், தனித்தன்மைக்கும் ஏற்ப, ஏராளமான படிப்புகளும், வாய்ப்புகளும் அதில் குவிந்து கிடக்கின்றன. அவற்றை சரியாக தேர்வு செய்யும் மாணவர்களே வெற்றியாளர்களாக மிளிர்கின்றனர்.
அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றும் முயற்சியில், காலைக்கதிர் தொடர்ந்து, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கொரோனா சூழலால் தடைபட்ட கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று சேலம் புது பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
காலைக்கதிர் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
டிஜிட்டல் யுகத்தில் அமர்ந்த இடத்திலிருந்தே ஆயிரக்கணக்கான தகவல்களை பெற முடியும் என்றாலும், அதன் நம்பகத்தன்மை மீது, சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், காலை, 10:00 மணிக்கு தொடங்க உள்ள கருத்தரங்கத்துக்கு, காலை, 8:00 மணி முதலே மாணவ, மாணவியர் வந்து, இடம்பிடிக்க தொடங்கினர்.
டாக்டர் வேலுமணி, உஷா ஈஸ்வரன், சத்தியகுமார் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க முதலில் ஆர்வத்துடன் வந்த மேட்டூர் மாணவன் சிரஞ்சீவி, தம்மம்பட்டி மாணவி சுபஸ்ரீ, ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர். கல்வி கண்காட்சியை, டாக்டர் வேலுமணி திறந்து வைத்தார். அவருடன் கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேஷ், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
குளுகுளு அரங்கத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஸ்டால்கள் அமைத்து, அவற்றில் கல்லுாரிகளின் தரம், சேர்க்கை விபரம், கட்டணம், உள் கட்டமைப்பு வசதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும், விபரங்களை கொண்ட கையேடுகளையும் வழங்கினர்.
சட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து சத்தியகுமார், சிகரம் தொடுவது எப்படி என டாக்டர் வேலுமணி, கல்லுாரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி என உஷா ஈஸ்வரன் ஆகியோர் காலை கருத்தரங்கில் விளக்கம் அளித்தனர்.
மதியம் நடந்த கருத்தரங்கில், நுழைவு தேர்வு மற்றும் ஸ்காலர்ஷிப் குறித்து காயத்ரி, வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது குறித்து வணங்காமுடி, நீட், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், வெற்றி பெறுவதற்கான டிப்ஸ் குறித்து அஸ்வின் ஆகியோரும் விளக்கம் அளித்தனர்.
இவற்றில் மாணவ, மாணவியருடன், பெற்றோரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, குறிப்பெடுத்துக்கொண்டனர். கருத்தரங்கின் துவக்கம் முதல், இறுதி வரை மாணவர் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டன.
கருத்தரங்கின் இடையே வழங்கப்பட்ட வினாத்தாளுக்கு, சரியான விடையளித்த 10 பேருக்கு வாட்சுகள், 2 பேருக்கு டேப், ஒருவருக்கு லேப்டாப் பரிசாக வழங்கப்பட்டன.
காலைக்கதிர் மீதான நம்பிக்கையை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர் திரண்டு வந்து, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பயனடைந்தனர்.
(மேலும் செய்தி, படம்
௪ம் பக்கம்)
கருத்தரங்கில் இன்று...
காலைக்கதிர் கல்வி வழிகாட்டி கருத்தரங்கில் இன்று காலை அமர்வில், ஐ.டி., துறையில் வாய்ப்புகள் குறித்து பாலாஜி; சி.ஏ., படிப்புக்கான வழிகாட்டுதல் குறித்து சங்கர்; 'கேரியர் கவுன்சிலிங்' குறித்து ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகின்றனர். மதியம், கலை, அறிவியல் படிப்புகள் குறித்து ஜூலியன் ஞானதாஸ்; 'கோர் இன்ஜினியரிங்' குறித்து பார்வதி; ஊக்குவித்தலின் அவசியம் குறித்து அரவிந்த் சுப்ரமணியம், 'டாப் கோர்சஸ்' குறித்து மாறன் பேசுகின்றனர்.