திருப்பூர் : 'அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா வசூல் பாக்கியை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன பொதுமேலாளர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், பொது 'இ-சேவை' மையம் மற்றும் ஆதார் மையங்கள், மாவட்டம் தோறும் இயங்கி வருகின்றன. புதிய 'செட்டாப்' பாக்ஸ் வினியோகம், ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகை வசூல் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கேபிள் 'டிவி' நிறுவனத்தின் பொதுமேலாளர் ரவி, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு கேபிள் ஆபரேட்டர்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அதை தொடர்ந்து, பொது 'இ-சேவை' மைய பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பொது மேலாளர் ரவி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும் 'இ-சேவை' மையங்களில், பொதுமக்களிடம் வசூலிக்கும் கட்டண தொகையை, தினமும் வங்கி கணக்கில் செலுத்திவிட வேண்டும். கட்டணம் தொடர்பான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். கேபிள் ஆபரேட்டர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா வசூல் தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்திவிட வேண்டும்.
இல்லாதபட்சத்தில், வழக்குப்பதிவு செய்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு 'செட்டாப்' பாக்ஸ் பெற்றவர்கள் பயன்படுத்தாமல் இருந்தால் திரும்ப ஒப்படைக்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், கேபிள் தாசில்தார்கள் போலீசில் புகார் செய்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.