கோவை : கோவை குதிரை வண்டி கோர்ட் வளாக புனரமைப்பு பணியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நேற்று ஆய்வு செய்தார்.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகில், அவிநாசி ரோடு மேம்பாலத்திற்கு, எதிரில் குதிரை வண்டி கோர்ட் வளாகம் உள்ளது. கோவையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழும், குதிரை வண்டி கோர்ட் வளாகம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 130 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
வளாகத்தில், சில மாஜிஸ்திரேட் கோர்ட்கள் செயல்பட்டு வந்தன. தி.மு.க., ஆட்சியில், 2001 ல், கலை கல்லுாரி சாலையிலுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், புதிய கட்டடம் கட்டப் பட்ட பின், குதிரை வண்டி வளாகத்தில் செயல்பட்ட நீதிமன்றங்கள் அனைத்தும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத் திற்கு மாற்றப்பட்டன.
அதன் பிறகு, குதிரை வண்டி கோர்ட் வளாகம் பராமரிக்கப்படாமல் பாழடைந்து, புதர் மண்டி கிடந்தது.பழமை வாய்ந்த இக்கோர்ட் வளாகத்தை, புராதன சின்னமாக பராமரிக்க அரசு உத்தரவிட்டது. இதனால், அந்த கட்டடத்தை பழமை மாறாமல் அப்படியே புனரமைக்க, ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று ஆய்வு செய்தார். அவருடன், ஐகோர்ட் நீதிபதி சுந்தர் மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து ஊட்டிக்கு காரில் புறப்பட்டு சென்றார். வரும் 2ம் தேதி, ஊட்டியில் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.