கடலுார் : கடலுார் மாவட்டத்தில் சூறைக்காற்றில் 711 ஏக்கர் வாழை சேதமாகியுள்ளது' என்று, வேளாண்துறை அதிகாரிகளின் முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதில் கடலுார் மலைகிராம பகுதிகளான ராமாபுரம், எம்.பதுார், எஸ்.புதுார், வெள்ளக்கரை. ஒதியடிக்குப்பம், டி.புதுப்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.எனவே, வேளாண் துறையினர் வாழை சேத பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, கலெக்டர் பாலசுப்ரமணியன் உத்தரவுபடி, கடலுார் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருண் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், பாதிக்கப்பட்ட கடலுார் பகுதிகளான அன்னவல்லி, வெள்ளக்கரை, ராமாபுரம், காரைக்காடு, வெள்ளப்பாக்கம், விலங்கல்பட்டு, சேடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட கணக்கெடுப்பில், கடலுார் வட்டார பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளதாவும், அதில் 711 ஏக்கர் பாதித்துள்ள தாகவும், 392 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.முதல் கட்ட கணக்கெடுப்பு அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடலுார் மாவட்டம் முழுவதும் வாழை பாதிப்பு தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்டவைகளின் துறைரீதியான ஆய்வு அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகள், நிலங்கள் சேத விபரங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பலா உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முழுமையான கணக்கெடுப்பை போர்க்கால அடிப்படையில் முடித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.