தஞ்சாவூர்: பிரதமர் மோடி பேசியதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கூடுதலாக புத்துயிர் கிடைக்கும் என தஞ்சாவூர் தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில், தஞ்சாவூரிலிருந்து, தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் எனக்கு புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் அனுப்பியுள்ளனர். இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தலையாட்டி பொம்மை அனுப்பிய அந்த சுய உதவி குழுவை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், புவிசார் குறியீடு தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து தஞ்சாவூர் தாரகைகள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை சேர்ந்த மணிமேகலை கூறியதாவது;
தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி மற்றும் அதிகாரிகளின் சீரிய முயற்சியால், தஞ்சாவூர் தாரகைகள் மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. இந்த அங்காடியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், பல்லாங்குழி, புல்லாங்குழல், கூடைகள், சணல் பைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் என 28 மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்கள் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு தலையாட்டி பொம்மைகள், இரண்டு நடன மங்கை பொம்மைகளை பிரதமர் மோடிக்கு, கலெக்டர் மூலமாக அனுப்பி வைத்தோம். இது குறித்து பிரதமர் மோடி பேசியது பெருமையாக உள்ளது. இனி மற்ற பெண்களும் சுயமாக பொருட்கள் விற்பனை செய்ய ஊக்கமாக இருக்கும். மகளிர் சுய உதவிக்குழு கூடுதலாக புத்துயிர் கிடைக்கும். இந்த பெருமை பாராட்டுக்கள் அனைத்தும் கலெக்டருக்கும், மகளிர் திட்ட அலுவலருக்கும், மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கே சேரும். இதன் மூலம் இந்தியா முழுவதும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் சிறப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் சிறப்பு பரவியுள்ளது இவ்வாறு தெரிவித்தார்.
கலெக்டர் மகிழ்ச்சி
இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது; ராமநாதபுரத்தில் முகவை மங்கையர் பனை, சிப்பி கைவினைப்பொருள் அரங்கு ஒன்றை 2021ம் ஆண்டு ஏற்படுத்தினேன். அதன் தாக்கத்தால் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களையும், தஞ்சாவூர் கைவினைப்பொருள்களின் பெருமையும் அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில் தாரகை துவங்கப்பட்டது. பிரதமர் பேசியது மிகவும் பெருமையாகவும், மகிழ்சசியாகவும் உள்ளது. மகளிர் சுய உதவினரின் வளர்ச்சி நிச்சயம் உயரும் இவ்வாறு தெரிவித்தார்.