ஓசூர்:தேசிய அளவிலான வாலிபால் போட்டியில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்றது.உத்தரபிரதேச மாநிலம், மதுராவிலுள்ள விளையாட்டு அரங்கத்தில், இந்திய இளையோர் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில், தேசிய அளவிலான கோ-கோ, கபடி, கேரம் மற்றும் வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டில்லி, உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. இதில், தமிழகத்திலிருந்து, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மாணவியர், பெண்கள் பிரிவு வாலிபால் போட்டியில் பங்கேற்றனர். ஹரியானா மாநில அணியுடன் நடந்த இறுதி போட்டியில், 25 - 21, 25 - 16, 26 -24 என்ற நேர் செட் கணக்கில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு, பரிசு கோப்பை, சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, மாநகர மேயர் சத்யா, பள்ளி தலைமையாசிரியை லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி, ஈகல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.