பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே நடந்த தேர் திருவிழாவில், தேர் கவிழ்ந்து இருவர் பலியாக, அரசின் எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்காதது தான் காரணம் என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களின் மக்கள் பங்கேற்கும் காளியம்மன்கோவில் திருவிழா நடைபெறுகிறது.கடந்த, 6ம் தேதி, திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், தேஹள்ளி காளியம்மன் கோவில் தேர் மற்றும் தேர் வரும் பாதைகளை ஆய்வு செய்தார்.
போலீசில் புகார்
அப்போது, தேரில் போதிய கட்டமைப்பு இல்லை; தேர் செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்அசம்பாவிதம் ஏற்படும் என, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, 8ம் தேதி தேர் திருவிழா தொடர்பாக, 12 அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது. விவசாய நிலம் வழியாக தேர் வந்தது. மாலை, 6:45 மணிக்கு தேர் முட்டியின் அருகே தேர் வந்த போது, அப்பகுதியில் இருந்த வயல் வரப்பில் வேகமாக இறங்கியது. தேரின் வேகத்தை கட்டுப்படுத்த, சக்கரத்தில் கட்டை போட்டுள்ளனர். இதனால் நிலை தடுமாறி தேர் கவிழ்ந்தது.இடிபாடுகளில் சிக்கி, பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மனோகரன், 56, பில்லப்பநாயக்கனஹள்ளியைச் சேர்ந்த சரவணன், 60, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த நான்கு பேர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர் திருவிழா நடந்த, அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் புறக்கணித்ததால் தான், இந்த விபரீதம் நடந்துள்ளது என, மக்கள் கொந்தளிக்கின்றனர்.
விழாக்குழுவினர்
பென்னாகரம், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர்கணேஷ் கூறியதாவது: அரசுத்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டத்தில், யாரும் ஆட்சேபனை தெரிவிக்காததால், விழாக்குழுவினர் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை நடத்தினர். 'கோவில் விழாவில் அறநிலையத்துறையினர் தலையிடக் கூடாது' என, விழாக்குழுவினர் தெரிவித்ததால், நான் ஒருவன் மட்டுமே விழா நிகழ்வுகளை கண்காணித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன், சரவணன் உடலுக்கு, வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று அஞ்சலி செலுத்தி, அரசு இழப்பீடு தொகையான 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உறவினர்களிடம் வழங்கினார். தொடர்ந்து, விபத்து நடந்த மாதேஹள்ளி சென்று ஆய்வு செய்தார்.
தேர் திருவிழா விதிமுறைகள்!
கோவிலில் தேரோட்டம் நடைபெறும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை, 2012 டிச., 6ம் தேதி, தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
*தேரோட்டம் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன், தேர் சக்கரம், அச்சு, இதர பாகங்களை ஆசாரி அல்லது ஸ்தபதியை வைத்து உறுதி செய்ய வேண்டும்
*ஆறு மாதங்களுக்கு முன், பொதுப்பணித்துறையினரிடம் உறுதி சான்று பெற்று, அவர்கள் தெரிவிக்கும் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
* தேரின் எடையை தாங்கும் வகையில், உள்சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
* தேரோட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பும், அலங்கரித்த பிறகும், பொதுப்பணித்துறையினரிடம் உறுதி சான்று பெற வேண்டும்
*தேரோட்டம் நடைபெறும் போது, தேருக்கு முன், பின் 15 அடி இடைவெளி அவசியம். தேர் சக்கரத்திலிருந்து 7 அடி இடைவெளிக்குள் யாரும் வராமல் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்
*தேரோட்ட நாளுக்கு முன், உதவி ஆணையர், நிர்வாக அலுவலர், ஆய்வாளர் ஆகியோர், தேர் மற்றும் தேரோடும் பாதையை ஆய்வு செய்ய வேண்டும்
*தேருக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள், பயிற்சி பெற்றவர்களாகவும், சீருடையுடனும் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை சரியாக பின்பற்றியிருந்தால், தேர் விபத்து நடந்திருக்காது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் விபத்துக்கு காரணம் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.