சென்னை, :சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் திடீர் கன மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில், குடிநீர் ஏரிகளில் தற்போது, 2.4 டி.எம்.சி., கொள்ளளவு உயர்ந்துள்ளது. அதே சமயம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால், குடிநீர் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் உள்ளிட்டவை முக்கிய பங்காற்றுகின்றன.மழைக்காலங்களில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழை நீர், மேற்கண்ட நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்படுவதால், கோடைக்காலங்களில் இந்த நீர், சென்னைவாசிகளுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு மாதம், 1 டி.எம்.சி., குடிநீர் தேவைப்படும்.இரு மாதங்களுக்கு முன்பே, மேற்கண்ட நீர்த்தேக்கங்களில், 8 டி.எம்.சி., நீர் கையிருப்பு இருந்ததால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், அடுத்த மூன்று மாதங்களில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்பதால், இந்த ஆண்டும், அடுத்த ஆண்டு கோடையிலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் 22ம் தேதி, செம்பரம்பாக்கம் ஏரியில், 2.6 டி.எம்.சி., நீர் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக, நேற்று ஏரியின் நீர் இருப்பு 3.5 டி.எம்.சி.,யாக இருந்தது.இதன் வாயிலாக, கடந்த ஆண்டை விட தற்போது, 1.1 டி.எம்.சி., நீர் அதிகம் உள்ளது. சோழவரம் ஏரி, தேர்வாய் கண்டிகை தவிர, பூண்டி, புழல், வீராணம் ஆகிய ஏரிகளில், கடந்த ஆண்டை விட நீர் இருப்பு அதிகம் உள்ளது.கடந்த ஆண்டு இதே நாளில் ஒப்பிடுகையில், மேற்கண்ட ஏரிகளில், மொத்தம் 2.4 டி.எம்.சி., நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, நேற்று முன்தினம் 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று காலை முதல் 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பிற ஏரிகளிலும், நீர் வரத்து மற்றும் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைக்கேற்ப உபரி நீர் திறக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர் மழை காரணமாக, சென்னையில் குழாய் மற்றும் லாரி குடிநீர் வினியோகத்தின் அளவும் குறைந்துள்ளது. மழை பெய்யாத, 18ம் தேதி, குழாய் வழியாக, 94 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று, 90.36 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மழையால், மக்களின் தண்ணீர் பயன்பாடும் குறைந்துள்ளது. அதே போல், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் லாரி குடிநீரின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.தொடர் மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக, குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, ஏரியில் போதிய நீர் கையிருப்பு இருந்ததால், கோடையில் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக, எதிர்பாராத வகையில் திடீர் மழை பெய்ததால், ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது; குடிநீர் தேவையும் குறைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். அதற்கு ஏற்ப பொதுமக்கள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரித்து வைக்க வேண்டும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்