ஓமலுார் அருகே, குத்தகைதாரர் ஆக்கிரமித்த, 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, உரியவரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலுாரில், வேலாசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, குப்புசாமி செட்டியார் துவக்கப்பள்ளி உள்ளன. இதன் பராமரிப்பு மேற்கொள்ள, பள்ளி டிரஸ்டுக்கு சொந்தமாக, எட்டிகுட்டப்பட்டி ஊராட்சி, செக்காரப்பட்டியில் உள்ள, 50 ஏக்கர் நிலத்தை, சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்லமுத்து, 55, என்பவருக்கு விற்பனை செய்தனர். மூன்றாண்டுக்கு முன், செல்லமுத்து மனைவி ராஜாமணி, அவரது மகன்கள் சித்தேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகியோர், 40 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து கொண்டனர்.
மீதி, 10.62 ஏக்கரில், குத்தகைதாரராக இருந்த, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் அரியாகவுண்டர் உள்பட, ஏழு குடும்பத்தினர், 'நிலத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்' எனக்கூறி காலி செய்ய மறுத்தனர். இதனால் செல்லமுத்து வகையறா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, ஏ.டி.எஸ்.பி., கென்னடி தலைமையில், 150க்கு மேற்பட்ட போலீசார், தாசில்தார் வள்ளமுனியப்பன் ஆகியோர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலை சென்றனர். இதற்கு, 15க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனத்தில் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து வருவாய் துறையினர், வீட்டில் இருந்தவர்கள் முன்னிலையில் பொருட்களை வெளியே எடுத்து வைத்து பூட்டி, 'சீல்' வைத்தனர். நிலத்தை மீட்டு செல்லமுத்து வகையறாவிடம் அதிகாரிகள்
ஒப்படைத்தனர்.