சென்னை, :சென்னையில் கொரோனா தொற்று காரணமாக, முதியோர்களிடம் கண்புரை நோய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக முதியோர், வழக்கமான கண் பரிசோதனைக்கு, அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்த்து விட்டனர்.இதனால் கண் பாதிப்பு, அதற்கான சிகிச்சையை எடுக்காத சூழல் ஏற்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, ரத்த அழுத்தம், புகை பிடிப்பவர்கள், ஸ்டிராய்டு மருந்து உட்கொள்வோருக்கு, பிற நாள்பட்ட உடல்நல பிரச்னைகளும் அதிகரித்தன.இவற்றால், கண்புரை பாதிப்புகள் அதிகரித்தன. தற்போது, கண் மங்கலாக தெரிகிறது என, மருத்துவமனைக்கு வரும் 100 பேரில், 60 பேருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது.கொரோனாவுக்கு முன், 100 பேரில், 10 பேருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு இருந்தது. இதனால், சென்னையில் ஐந்து மடங்கு கண்புரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிந்துள்ளது.கண்ணுக்கு உட்புறத்திலான அழுத்தத்தை, 40 வயதுக்கு மேற்பட்டோர் பரிசோதிக்க வேண்டும். அதேபோல், 50 வயதுக்கு மேற்பட்டோர், கண்புரை பாதிப்பு உள்ளதா என்பதை ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதிப்பது அவசியம்.பார்வைக் கூர்மை, சிறுபிளவு விளக்கு, வண்ணப் பார்வைத்திறன், விழித்திரை மதிப்பீடு ஆகிய பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை அளித்தால், கண்புரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கலாம்.ஆரஞ்சு, தக்காளி, ஸ்ட்ராபெரி, உருளைக்கிழங்கு, கிவி, புரோக்கோலி, பருப்பு வகைகள், பாதம் பருப்பு ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.இவ்வாறு அவர் கூறினார்.