சென்னை :சென்னை ஓபன் சதுரங்க போட்டியில், எட்டாவது சுற்று முடிவிலும், தமிழக வீரரான சேலத்தைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் நிதின் செந்தில்வேல், தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.அகில இந்திய சதுரங்க கழகத்தின் ஆதரவுடன், மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் சார்பில், மகாலிங்கம் கோப்பைக்கான, 13வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி-- 2022, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது.இதில், 11 நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 15 சர்வதேச மாஸ்டர்கள், 36 பல்வேறு பட்டம் வென்ற வீரர்கள் உட்பட, 275 வீரர்,- வீராங்கனையர் விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள், 'சுவிஸ்' முறையில், மொத்தம் 10 சுற்றுகளாக நடக்கின்றன.நேற்று வரை, எட்டு சுற்றுகள் நடந்துள்ளன. தொடர்ந்து முன்னிலையில் இருந்த, சேலத்தைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் நிதின் செந்தில்வேல், எட்டாவது சுற்றில் ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் சவ்செங்கோ போரிஸ்சுடன் மோதி, 'டிரா' செய்தார்.முடிவில், 7.5 புள்ளிகள் பெற்று, நிதின் செந்தில்வேல் தொடர்ந்து முன்னிலையை தக்கவைத்துக் கொண்டார். மேலும் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றால், கோப்பையை தட்டிச் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நிதின் செந்தில்வேலை தொடர்ந்து, 6.5 புள்ளிகளில் ரஷ்யா வீரர் சவ்செங்கோ போரிஸ், சென்னை வீரர்களான எஸ்.பிரசன்னா, சர்வதேச மாஸ்டர்களான ரவிச்சந்திரன் சித்தார்த் மற்றும் பொன்னுசாமி கொங்குவேல் உள்ளிட்டோரும் முன்னிலையில் உள்ளனர்.இதுவரை எந்த பட்டமும் பெறாத எஸ்.பிரசன்னா, கிராண்ட் மாஸ்டர்களுடன் திறமையாக விளையாடி, போட்டியில் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.