திருச்சி:''என்னை சீண்டிப்பார்த்தால், எந்த ரகசியத்தை எப்போது சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்,'' என, நேற்று முன்தினம் கைது செய்யப்படுவதற்கு முன், பா.ஜ., - ஓ.பி.சி., பிரிவு மாநில பொதுச் செயலர் சூர்யா தெரிவித்தார்.
ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா. தனியார் ஆம்னி பஸ்சை கடத்தியதாக, கைது செய்யப்பட்டார்.கைதுக்கு முன் அவர் கூறியதாவது:திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும், 300 பஸ்கள் 'பர்மிட்' இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதை கவனிக்க அமைச்சர்களுக்கு நேரம் இல்லை.
காழ்ப்புணர்ச்சியால், என் மீது நடவடிக்கை எடுப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். இவர்களால், நியாயமாக பர்மிட் வைத்து பஸ் இயக்குபவர்கள் வியாபாரத்தையும் கெடுத்து, நஷ்டம் ஏற்படுத்துகின்றனர். நியாயமாக, சீசன் நேரத்தில், அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்களை நிறுத்த வேண்டும்.
என்னை கைது செய்து, சிறையில் அடைத்தாலும், தி.மு.க.,வினரை விமர்சனம் செய்வதை நிறுத்த மாட்டேன். அவர்கள் எவ்வளவுசெய்தாலும், நான் அசரப் போவதில்லை. என்னை சீண்டிப் பார்த்தால், எந்த ரகசியத்தை எப்போது சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.