திருநெல்வேலி:நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த மகாலட்சுமி, தன் நிலத்தின் பட்டா பெயர் மாற்றத்திற்கு வருவாய்த்துறை சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார்.இதற்கு, சர்வேயர் அன்பழகன், 40, லஞ்சமாக, 6,000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை மகாலட்சுமியிடம் கொடுத்து, சர்வேயர் அன்பழகனிடம் கொடுக்கச் செய்தனர்.அந்த பணத்தை வாங்கிய போது, கையும் களவுமாக அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.அன்பழகன், மதுரை மாவட்டம், கருப்பாயூரணியை சேர்ந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன் தான் அங்கு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.