ஆத்துார்:சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது, கன்டெய்னர் லாரி மோதியதில், இரு விவசாயிகள் இறந்தனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, அருணா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ராமசாமி, 62, சின்னசாமி, 53.இந்த இருவர் உட்பட நான்கு பேர், அறுவடை செய்த தக்காளியை, மினி சரக்கு வேனில் ஏற்றி, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றனர். சரக்கு வேனை இளங்கோவன், 30, ஓட்டினார்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தலைவாசல், மணிவிழுந்தான் அருகே சென்றபோது, வேனின் டயர் வெடித்து நின்றது.
மாற்று டயரை பொருத்தும் பணியில் டிரைவர் ஈடுபட்டிருந்த போது, வேனின் பின்பகுதியில் ராமசாமி, சின்னசாமி நின்றிருந்தனர்.அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, சாலையோரம் நின்றிருந்த வேன் மீது மோதியது.இதில், ராமசாமி, சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தலைவாசல் போலீசார், தலைமறைவான கன்டெய்னர் லாரி டிரைவரை தேடுகின்றனர்.